ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிஐ அதிகாரிகள் தற்போது மீண்டும் உத்தரப் பிரதேசம் சென்றுள்ளனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் ஹத்ராஸில் உள்ள புல்காரி கிராமத்திலுள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரது குடும்பத்தினரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கண்டெடுக்கப்பட்ட இடம், ஏரியூட்டப்பட்ட இடம் ஆகியவற்றுக்கும் சென்று அவர்கள் விசாரணை செய்தனர்.
இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தீப், ரவி, ராமு, லவ்குஷ் ஆகியோரையும் சிபிஐ விசாரித்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாக்குமூலத்தை பெற சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஹத்ராஸில் உள்ள கிராமத்திற்கு இன்று சென்றுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் வழக்கு: மாயமான மருத்துவமனை சிசிடிவி காட்சிகள்