ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருந்த நிலையில், சிபிஐயும் தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 28 மணி நேரமாக சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை திணறிவந்த நிலையில், இன்று இரவு 8 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து சிதம்பரம் தலைமறைவு என்ற வதந்தி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ஏற்கனவே நான்கு முறை அவரது வீட்டிற்கு வந்து சோதனையிட்ட சிபிஐ அலுவலர்கள் தற்போது ஐந்தாவது முறையாக அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் சிபிஐ, சிதம்பரத்தின் வீட்டிற்கு விரைந்தனர். வீட்டின் முன்புற இரும்பு கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அலுவலர்கள் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே நுழைந்தனர். சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சிதம்பரம் வீட்டில் நுழைந்துள்ளனர். சிதம்பரம் விவகாரம் டெல்லியில் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.