உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் 1992ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் சிபிஐ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கால அவகாசம் கோரி சிபிஐ சிறப்பு நீதிபதி அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி வழக்கில், 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம், அங்கு ராமர் கோயில் கட்டலாம், மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராமர் கோயில் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஃபேல் விமான தளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்