ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே இந்தியா முழுவதும் சீனப் பொருள்களை புறக்கணிக்கக்கோரி குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கரோனா வைரஸை எதிர்கொள்ள தொடங்கப்பட்ட பிரதமர் நிவாரண நிதிக்கு (PM Cares), பல சீன நிறுவனங்கள் பணமளித்துள்ளன. எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த பணத்தினை நாம் எடுத்துக்கொள்வோம் என்று நினைக்கவில்லை.
நாம் அனைவரும் சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நிவாரண நிதிக்கு (PM Cares) எவ்வளவு பணம் வந்தது என்பது பற்றிய கேள்வி இது அல்ல. மாறாக, ஒரு ரூபாய் சீன நிறுவனங்களிடமிருந்து வந்திருந்தாலும், அவற்றை நாம் திருப்பியளிக்க வேண்டிய தருணம் இது.
கரோனா வைரஸ், நமது எல்லை ஆக்கிரமிப்பு ஆகிய இரண்டிற்கும் சீனாவே முக்கிய காரணம். இந்தியாவைத் தற்காத்துக்கொள்ள சீனாவின் பண உதவி நமக்கு தேவையில்லை'' என்றார்.
இதையும் படிங்க: தேசிய புள்ளியியல் தினம்; பிரசாந்தா சந்திர மஹலனோபிஸ் வாழ்க்கை ஒரு பார்வை