கோவிட் -19 தொற்று நோய் பரவிவரும் சூழலில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி டெல்லி பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர்.
அம்மனுவில், "திறந்தவெளி கற்றல் வழியில் பயிலும் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் தேர்வு தொடர்பாக மே 14, மே 30, ஜூன் 27 ஆகிய தேதிகளில் வெளியான அறிவிப்புகளை ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
இம்மனு நீதிபதி பிரதிபா எம்.சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒரு மாணவரின் மன அதிர்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாமா, அவர்கள் இதை எப்படி தயாராவார்கள் என எதிர்பார்க்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டெல்லி பல்கலைக்கழக ஆலோசகர் சச்சின் தத்தா, முதன்மை தேர்வு அலுவலர் வினய் குப்தா ஆகிய இருவரும், "கோவிட்-19 அச்சுறுத்தல் நிலைமை அசாதாரணமானதாக இருப்பதால், எங்களால் ஒரு தற்காலிக அட்டவணையை மட்டுமே கொடுக்க முடிந்தது" என தெரிவித்தனர்.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதிபா எம்.சிங்,"தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எந்தவொரு மாணவரும் விடைத்தாள்களைப் பதிவேற்ற முடியாவிட்டால், அவர்கள் அதை பல்கலைக்கழகத்திற்கும் மின்னஞ்சல் செய்யலாம் மற்றும் தேர்வு நேரம் முடிந்ததும் 30 நிமிடங்கள் சாளரம் திறந்திருக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்ததும், ஒரு குழு தொழில்நுட்பக் குறைபாட்டை ஆராய்ந்து விடைத்தாள்களை ஏற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்யும் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை.
மத்திய அரசும், டெல்லி பல்கலைக்கழகமும் கோவிட் -19 தொற்றுநோய் பரவலால் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலும் வேதனையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. மேலும், தேர்வுகள் என்பது நடைமுறை, தொழில்நுட்ப பிரச்னை சார்ந்தது மட்டுமல்ல. மாணவர்களின் மன தயார்நிலை நிலையையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். எனவே, ஜூலை 10 தொடங்கவிருக்கும் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வுகளின் அட்டவணையில் மாற்றம் ஏற்படுமா என முதலில் பதிலளியுங்கள்" எனக்கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.