புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மதுக்கடைகளை திறப்பது, பெட்ரோல், மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிப்பது, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் நேரத்தை மாற்றியமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்தக் கூட்டத்தில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது போல் மதுவிற்கு கோவிட் வரி விதித்தால் புதுச்சேரியின் முதன்மை வருவாயை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கும். எனவே, அதை விட சற்று குறைவாக மதுவிற்கு கோவிட் வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருத்தங்களுடன் கூடிய அந்த கோப்பையை மீண்டும் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலர் அஸ்வின் குமார் உள்ளிட்ட அனைத்து துறை செயலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நேற்று (மே 20) புதுச்சேரியில் மதுக்கடை திறப்பது தொடர்பாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வரி விதிப்பதில் சில திருத்தங்கள் தேவையென வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : உ.பி.யில் கரோனா பரப்புவதாக மருத்துவர் மீது தாக்குதல்: 3 பேர் கைது