சமீப காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டிஜிட்டல் போர் ஒன்று நடைபெற்று வருகிறது. எல்லையில் தொடங்கிய மோதல், ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இந்நிலையில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) துறையில் வளர்ச்சியை மேம்படுத்த, ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு இன்று (அக்.29) ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, 5ஜி நெட்வொர்க், தொலைத் தொடர்பு பாதுகாப்பு, நீர்மூழ்கிக் கப்பல் கேபிள், தகவல் தொடர்பு சாதனங்களின் சான்றிதழ், வயர்லெஸ் தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ஐ.சி.டி), ஐ.சி.டி திறன் மேம்பாடு, பேரழிவு நிவாரணம், செயற்கை நுண்ணறிவு (AI) , ஸ்பெக்ட்ரம் சங்கிலி, ஸ்பெக்ட்ரம் மேலாண்மை போன்ற பல்வேறு ஐசிடி துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
ஐ.சி.டி தொழில்நுட்பங்களின் ஒத்துழைப்பு, நாட்டில் ஐ.சி.டி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் உதவும். அதேவேளையில், எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மூலம் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை அடைந்திடவும் இது உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.