கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு ஆட்சி நடக்கிறது. இந்த அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துவருகிறது. இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானமும் இயற்றப்பட்டது.
அந்தவகையில் நாட்டிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமியற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையும் அம்மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி கடந்த 13ஆம் தேதி பினராயி விஜயன் அரசு உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வழக்கும் தொடர்ந்தது.
இது மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கை அதிகரித்தது. இந்நிலையில் மாநில ஆளுநர் ஆரீஃப் முகமது கான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கலாம். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் தலையங்கம் ஒன்று வெளியானது. அதில் 'ஆளுநரின் வார்த்தை விளையாட்டு' என்ற பெயரில் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஆளுநர் மாளிகை உள் துறை செயலருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில் ஆளுநரிடம் தெரிவிக்காமல் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளது.
முன்னதாக ஆளுநர், கேரள இலக்கிய விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழாவில் கலந்துகொள்ளாமல் ஆளுநர் தவிர்த்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ.வை எதிர்த்தாலும் சட்டத்தை மீறக் கூடாது' - பினராயி விஜயனுக்கு ஆளுநர் அறிவுரை