நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள், போட்டி தேர்வுகளை ஒரு சில மாநிலங்கள் ஒத்திவைத்தும், ரத்து செய்தும் வருகின்றன.
இந்நிலையில், மே மாதம் சுழற்சியின் கீழ் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 16 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சிஏ (Chartered Accountant) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கரோனா பெருத்தொற்று காலத்தில் ஐ.சி.ஏ.ஐ. வெளியிட்ட தேர்வு அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும், நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டது. ஐ.சி.ஏ.ஐ.-யின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அதனை நிராகரித்தது.
முன்னதாக, ஜூன் 29ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தொற்று நோய்களுக்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவதில் ஐ.சி.ஏ.ஐ. நெகிழ்வாக இருக்க வேண்டும் என்றும், தேர்வாளர்களின் நிலையைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது. தேர்வு நாளுக்கு முந்தைய வாரம் வரை தேர்வு மையத்தை மாற்றுவதற்கு, தேர்வாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.