உத்தரப் பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத் மாவட்டத்தை அடுத்துள்ள நாக்லா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்களால் கடந்த வாரம் காட்டுப்பகுதியில் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
பலத்த காயங்களோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், தீவிர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைதுசெய்வதில் அரசு தரப்பு அலட்சியம் காட்டிவந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், புலந்த்ஷர் வட்டார காவல்துறை வட்டார அலுவலர் (சிஓஓ) அதுல் சௌப்பே இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தொடர்ந்து நாளுக்கு நாள் உடல் நிலை மோசமடைந்துவந்த அந்த இளம்பெண் நேற்று (அக்.18) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பட்டியலின இளம்பெண்ணுக்கு நீதி கேட்டு அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ஹத்ராஸ் பாலியல் வன்படுகொலைக்கு நீதி கேட்ட நடைபெற்ற போராட்டங்களைப் போல நாக்லா பெண்ணுக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்காமல் இருக்க நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நேற்று நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
உள்ளூர் காவல் துறையினர் இரவோடு இரவாக இறுதிச் சடங்குகளை நடத்துமாறு அந்தக் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தியதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிராம மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த புலந்த்ஷர் வட்டார காவல்துறை வட்டார அலுவலர் (சிஓஓ) அதுல் சௌப்பே தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.