புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியில் அமைந்துள்ள கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். கட்டிட கலையின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் முகலாய அரசர்கள் வாழ்ந்த அரண்மனை அமைப்பை கொண்டும், அதில் அரசர்கள் வாழ்ந்து பயன்படுத்திய வாழ்க்கை முறையையும் மையமாகக் கொண்டு தத்துரூபமாக தமது வீட்டை அமைத்திருக்கிறார்.
இக்காலத்தில் இதுபோன்ற கட்டடங்களை கட்ட முடியாது என பலரும் எண்ணும் சமயத்தில், அரசர்களின் அரண்மனை பாணியில் கோட்டை போன்று அமைப்புகள் அடங்கிய தன் வீட்டை உருவாக்கி அனைவரையும் வாய்பிளக்கச் செய்துள்ளார்.
இவரின் இந்த வீட்டின் சிறப்பம்சங்களாக முப்பரிமாண புத்தர் சிலை, இளைப்பாற பொன்னூஞ்சல் இடம்பெற்றுள்ளது. மேலும் அரசர்கள் வாழ்ந்த முறையில் தர்பார் ஹாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூலிகை பயன்படுத்திய கட்டிட அமைப்பும் உள்ளன. பண்டைய காலத்தில் அமைக்கப்பட்டது போன்று 18 இசைத்தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தூண்களிலுள் ஒரு தூணில் தட்டினால் அனைத்து தூண்களிலும் அதே ஒளி உணரப்படும்.
பண்டைய காலத்தில் அரசிகள் பார்வையிட ஏற்படுத்தப்பட்ட முப்பரிகை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அமைப்பாக அரசர்களுக்கான தர்பார் ஹால் எனும் அமைப்பு கொண்ட கட்டடத்தினுள் ஆண்கள் பேசுவது மட்டும் எதிரொலிக்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் அந்த ஹால் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்களின் குரல் எதிரொலிக்காத வண்ணம் அதை உருவாக்கி உள்ளனர்.
உறக்கத்திற்கு ஏற்ற மன அமைதியை தரும் சந்தனம், செம்மரம், கடுக்காய், வாகை எனும் ஐந்து வகையான மூலிகைகளை பயன்படுத்தி கட்டிலும், ராணிகள் பயன்படுத்தும் பன்னீர், கழுதை பால், ரோஜா பூ மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நீராடும் குளியல் தொட்டி ஆகியன பழங்கால அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கன்னி மாடம் மற்றும் நகைகள், பணம், பாதுகாப்பிற்காக சுரங்க அமைப்புகளையும் இந்த பிரமாண்ட வீடு கொண்டுள்ளது.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் கனகராஜ் கூறுகையில், இந்த வீட்டை கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. தனது மனைவிக்காகவே பார்த்து பார்த்து வீடிடை கட்டினேன் என்றார். முகலாயர் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் தற்போது நவீன காலத்து கட்டடம் கட்டுவதற்கு எடுத்துக்காட்டாக அமைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.