கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமானது கபாலி திரையரங்கம். சமீபத்தில், இந்தத் திரையங்கு கட்டுமானப் பணிக்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இச்சூழலில், இத்திரையரங்குக்குப் பின்னால் இருந்த நான்கு மாடிக் கட்டடம் நேற்றிரவு 10.15 மணியளவில் இடிந்துவிழுந்தது. அதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ஆய்வுசெய்தனர்.
கட்டடம் இடிந்துவிழுந்ததால், அதன் அருகிலிருந்த கட்டடங்களிலும் விரிசல் ஏற்பட்டது. இக்கட்டடம் தங்கும் விடுதியாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டடம் இடிந்துவிழும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். கட்டடம் சீட்டுக்கட்டாய் சரிந்துவிழும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.