புதிய வேளாண் சட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதிலும் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் அங்கமாக, டெல்லியில் பஞ்சாப் விவசாயிகளுடன் வேறு மாநில விவசாயிகளும் ஒன்றிணைந்து பெருமளவில் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்நிலையில், விவசாய அமைப்புகளுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய கோரும் விவசாயிகள் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் (பிஎஸ்என்எல்யூ) முழுமையாக ஆதரவளிக்கிறது.
இந்தப் புதிய சட்டங்கள், அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறிக்கிறது. இதுமட்டுமின்றி, மின்சார மசோதா 2020 ஐ முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நாளை (டிசம்பர் 08) மதிய உணவு நேரத்தின்போது விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
காங்கிரஸ், என்.சி.பி., திமுக, எஸ்.பி., டி.ஆர்.எஸ். போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் டிசம்பர் 8ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் 'பாரத் பந்த்'க்கு ஆதரவு அளித்துள்ளன.