உலகம் முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கு கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் அல்லது கரோனா தொற்றின் தீவிரம் குறைகிறது என்பதை சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அந்த ஆய்வின்படி, உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்து ஆன்டிஹைபர்டென்சிவ் உபயோகிக்கும் 28 ஆயிரம் நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஞ்சியோடென்சின், என்சைம் தடுப்பான்கள் (ACEi), ஆஞ்சியோடென்சின் ரிசெப்டர் பிளாக்கர்ஸ் (ARB) எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு கடுமையான கோவிட்-19 பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் வஸிலியோஸ் வஸிலியோ கூறுகையில், "தொற்றுநோய் ஆரம்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தத்திற்கு எடுக்கப்படும் மருந்துகள் கோவிட் -19 நோயாளிகளுக்கு மோசமான விளைவுகளுடன் ஏற்படுத்தலாம் என்ற கவலை இருந்தது.
எனவே, இம்மருந்தின் தாக்கம் கரோனா நோயாளிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை ஆராய முடிவுசெய்யப்பட்டது. அதன்படி தொடங்கிய இந்த ஆய்வில், கோவிட்-19, ஏ.சி.இ., ஏ.ஆர்.பி. மருந்துகள் தொடர்பான 19 ஆய்வுகளின் தரவுகளை உபயோகித்து 28 ஆயிரம் நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல முக்கியமான விஷயங்கள் உறுதியாகின. இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோயாளிகளுக்கு தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். ஆனால் இந்த மருந்துகளால் கரோனா தொற்றின் தீவிரத்தை அல்லது உயிரிழப்பை அதிகப்படுத்தும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை.
அதற்கு மாறாக, இறப்பு விகிதம் குறைவது தெளிவாகத் தெரிந்தது. எனவே, இந்த மருந்துகளை உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.