பிரதமர் மோடி இன்று கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை துலாபாரம் மூலம் காணிக்கை வழங்கினார். பின்னர் குருவாயூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், குஜராத்தைச் சேர்ந்த நான் குருவாயூருக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கேரளாவில் பாஜக வெற்றி பெறாதபோதும் இங்கு வந்து மக்களுக்கு நன்றி தெரிவிப்பது குறித்து பல அறிஞர்கள் கேலி செய்கின்றனர். ஆனால் இதுபோன்று நன்றி தெரிவிப்பதே எங்களின் பாரம்பரியம்.
தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள், எதிராக வாக்களிக்கதவர்கள் என 130 கோடி மக்களையும் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்களின் கடமை. வாரணாசியைப் போன்றுதான் நான் கேரளாவையும் பார்க்கிறேன். மக்கள் ஐந்து வருடத்திற்கான தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளோம்.
நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கேரள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தரும் என்று அவர் தெரிவித்தார்.