வடக்கு டெல்லி மாநகராட்சியின் ஆம் ஆத்மி தலைவர் அஜய் சர்மா ஆன்லைன் வகுப்பில் மாணவர்களுக்கு தவறான தகவல்களை கட்டாயமாக ஆளும் மத்திய அரசு திணித்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "தேசியவாதத்தைப் பற்றி தொடர்ந்து பேசும் கட்சி தவறான இந்திய வரைபடத்தை நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கிறது, மேலும் குழந்தைகள் தங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் அதனை கட்டாயமாகக் கற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அப்பாவி மாணவர்களின் எதிர்காலத்தை பாஜக இதன் மூலம் அழிக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் பகுதியில் இந்தியாவின் முற்றிலும் தவறான அரசியல் நோக்குடன் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை மாணவர்கள் கற்பிக்கப் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த வரைபடத்தில், காஷ்மீருக்கு பதிலாக பாகிஸ்தானின் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இந்த பிரச்னை நிச்சயமாக உயர்மட்டத்தில் எழுப்பப்படும் என்று எச்சரித்தார்.
முன்னதாக, இஸ்லமாபாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீரை உள்ளடக்கிய ஒரு 'கற்பனையான' வரைபடத்தை பாகிஸ்தான் முன்வைத்ததைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
பாகிஸ்தானின் நடவடிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு சாசனத்தை அப்பட்டமாக மீறுவதாகவும், உறுப்பு நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான விதிமுறைகளுக்கும் எதிரானது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.