வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பலமான கட்சியாக திகழும் பாஜக தென் மாநிலங்களிலும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய நகர்வாக ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தலை குறிவைத்து தற்போது காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது.
திருப்பதி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் பல்லி துர்கா பிரசாத் ராவ் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சந்திப்பு மேற்கொண்டார்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஜனசேனாவுடன் இணைந்து தேர்தலில் எப்படி வெற்றிக்கொள்வது என்பது தொடர்பாக இச்சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக நட்டா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள தபூக்கா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக எதிர்பாரத வெற்றிப்பெற்று ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மரடோனாவுக்கு சொந்த செலவில் சிலை வைப்பேன்' - கோவா அமைச்சர்!