சீனாவில் தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துவந்தாலும் இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. அதேபோல், இந்தியாவிலும் நாளுக்கு நாள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணங்களை மக்கள் மேற்கொள்ளக் கூடாது என்றும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக சார்பில் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தவொரு போராட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.
மேலும், பாஜக சார்பில் எந்தவொரு பொதுக்கூட்டமும் நடத்தக் கூடாது என்று தெரிவித்த அவர், முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து அறிக்கைகளாக வெளிவரும் என்றும் கூறினார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்தும், இதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாஜகவினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று (மார்ச் 17) நடைபெற்ற பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கோவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பாகப் பாஜகவினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவ வீரருக்கு கோவிட்-19 தொற்று உறுதி