உத்தரப் பிரதேசம் மாநிலம் மொகமதாபாத் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக கிருஷ்ணானந்த் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ முக்தார் அன்சாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் முக்தார் அன்சாரியை நீதிமன்றம் விடுவித்தது. தற்போது, அவர் வேறு வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராயின் மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான அல்கா ராய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "எனது கணவரின் இறப்புக்கு நீதி கேட்டு 14 ஆண்டுகளாக போராடி வருகிறேன். காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசு, முக்தார் அன்சாரியை காப்பாற்றி வருகிறது. அன்சாரியை மீண்டும் உத்தரப் பிரதேசத்திற்கு மாற்ற பஞ்சாப் அரசு மறுத்துவிட்டது. குற்றவாளி முக்தார் அன்சாரி பல குடும்பங்களை அழித்துள்ளார். அவருக்கு தண்டனை கிடைக்க பல குடும்பங்கள் காத்திருக்கிறன" என்று குறிப்பிட்டிருந்தார்.