கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் இன்னும் சில பகுதிகளில் விதிகள் மீறப்பட்டதாக மத்திய உள் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. இதனால், வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சகம் கவலை தெரிவித்தது.
எனவே, சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் விதிகள் பின்பற்றுவதைக் கண்காணிக்கவும் ஆறு அமைச்சரவையை ஒன்றிணைத்து குழு ஒன்றை உருவாக்கி உள் துறை அமைச்சகம் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பியது.
மாநில அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் இக்குழு அனுப்பப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா எதிர்ப்புத் தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர் அகமது படேல், "கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள், ஊரடங்கு மீறல் ஆகியவற்றை அளவுகோல்களாக வைத்து பார்த்தால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஏன் இந்தக் குழுவை அனுப்பவில்லை. உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலம் குஜராத்தாகும்.
முன்னுரிமை வழங்கி ஏன் அந்த மாநிலத்துக்கு அனுப்பவில்லை? மத்திய குழுவின் உதவி அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: ’ஊதியம் வேண்டாம் தானியம் கொடுங்கள்’