பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 8ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்துவருகின்றன.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ், தேவேந்திர பட்னாவஸ், சஞ்சய் ஜெய்ஸ்வால், சுஷில் மோடி ஆகியோர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் பங்குபெறுவோர் கரோனா பரிசோதனை மேற்கொண்டு தக்க முன்னேற்பாடுகளுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்.28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி