வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் மாநிலத்தின் அமைச்சர்கள் ஆவார்கள். அவர்கள், பழங்குடி மற்றும் மலைப்பகுதி வளர்ச்சித் துறை அமைச்சராக என். கயிசி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக லெட்போ ஹோகிப் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் ஜெயந்த குமார் சிங் ஆகியோர் ஆவார்கள்.
இது மட்டுமின்றி துணை முதலமைச்சராக இருந்த ஜாய் குமார் சிங்கும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுகொண்டார். மீதமுள்ள ஐந்து பேரில் மூவர் பாஜகவையும், ஒருவர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள். மற்றொருவர் சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார்.
இந்த ஒன்பது பேரும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால், பைரன் சிங் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைக்க மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி யாருக்கும் வாய்க்கவில்லை.
28 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தனிப்பெரும்பான்மைமிக்க கட்சியாக திகழ்ந்தது. இந்நிலையில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, நாகா மக்கள் முன்னணி (4), லோக் ஜனசக்தி (1), தேசிய மக்கள் சக்தி (4), திரிணாமுல் காங்கிரஸ் (1) ஆகிய கட்சிகளை இணைத்து ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஒருவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை (ஜூன்19) நடக்கிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் லெய்சீமா சனஜோபாவும், பாஜக சார்பில் மங்கி பாபுவும் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணொலி: யோகா, கால்பந்து அசத்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!