மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. மராத்தியர்கள் மற்றும் மராட்டியத்தின் உரிமையை குறித்து தொடர்ச்சியாக பேசிவரும் சிவசேனா அரசு தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்புவரை மராத்தி மொழி கட்டாயப்பாடமாக வைக்கவேண்டும் என்ற சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளது. இதற்காக மராட்டிய சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
சி.பி.எஸ்.இ, ஐ.பி., ஐ.சி.எஸ்.இ. என அனைத்து வழிக்கல்வித் திட்டம் கொண்ட பள்ளிகளுக்கும் இந்த சட்டம் செல்லும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெயக்வாட் தெரிவித்துள்ளார். பல்வேறு கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்து, தென் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள திட்டங்களை ஆய்வு மேற்கொண்டே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுக்க முழுக்க மராத்தியில் மட்டும் நடத்த திட்டம் தீட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியிலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றுவருவதால் இதை சீர் செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: கைதான கடத்தல் கும்பல்; தப்பிய அம்மன் சிலை