அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பெரும் பணக்காரரர்களில் முதல்வருமான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார்.
முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் நடத்திவரும் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஃபவுண்டேஷன் அமைப்பு, இந்தியாவுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செயல்பட்டு வருகிறது. அதை நேரில் ஆய்வு செய்ய தனது மனைவியுடன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பில்கேட்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்தார். அதன் முதல்கட்டமாக, அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து பீகார் சென்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்துப் பேசினார்.
அம்மாநிலத்தின் அடுத்த மூன்று ஆண்டிற்கான சுகாதாரம், வேளாண்மை, பின் தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நிதித் தேவைகள் குறித்த வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், மாநில அரசின் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அப்பணிகளில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஃபவுண்டேஷன் இணைந்து பணியாற்றவுள்ளதால், அதற்கான திட்ட வரைவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வளர்ச்சிப் பணிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பில்கேட்ஸ் பங்கேற்றார்.
ஆலோசனைக் கூட்ட முடிவில், கடந்த பத்தாண்டுகளாக தாம் நிதிஷ் குமாரை கவனித்து வருவதாகவும் அவர் பீகார் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்றும் பில்கேட்ஸ் கூறினார்.
மேலும் கடந்த ஐந்தாண்டில் தங்கள் இருவருடனான சந்திப்பு இதுவே முதல் முறையாகும் என்று அவர் கூறினார். மேலும், பருவநிலை மாற்றம் குறித்த கருத்துகளை நிதிஷ் குமார் தம்மிடம் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அதற்காக நிதிஷ் குமாரை தான் பாராட்டியதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.
பில்கேட்ஸும் நிதிஷ்குமாரும் பருவநிலை மாற்றத்தை கடந்த சில ஆண்டுகளாக எவ்வாறு எதிர்கொள்ளவேண்டுமென்று, தொடர்ந்து மக்களுக்கு தனித்தனியாக பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: இந்தியாவின் 'பொதுச் சுகாதாரம்' மேம்பட பில்கேட்ஸ் சொல்லும் வழி