பிகார் மாநிலத்தின் 78 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் பார்வையாளர்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தின்போது தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்று கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சஞ்சய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கலால் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது உள்பட செலவின கண்காணிப்பின் அடிப்படையில் சில மாவட்டங்களின் செயல்திறன் மோசமாக உள்ளது என்று கருத்துக் கணிப்பு குழு தகவல் வெளியிட்டிருப்பதாக சிங் கூறினார். இந்த மாவட்டங்களில் கலால் கட்டணம் வசூலிப்பதில் விழிப்புணர்வையும் செயல்திறனையும் வெளிப்படுத்தவில்லை, இது தேர்தல் சூழலை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிகார் மாநிலத்தின் அர்வால், ஷெய்க்புரா ஆகிய மாவட்டங்களின் கலால் கண்காணிப்பாளர்களான நிதின் குமார், பிபின் குமார் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கலால் கண்காணிப்பாளர்களான கிருஷ்ணா முராரி (ஜெஹனாபாத்); தேவேந்திர குமார் (பக்ஸர்); ஷைலேந்திர சவுத்ரி (லகிசராய்); மற்றும் சஞ்சீவ் தாக்கூர் (ஜமுய்) ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
மறுஆய்வுக் கூட்டத்தின்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நடத்துவதற்கான தேர்தல் சூழலை மேலும் மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் மாநிலத்தில் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.