பாட்னா: கரோனா வைரசுக்கு மத்தியில் பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இலவச கரோனா தடுப்பூசி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி பாஜகவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து முதல்கட்டமாக பிகார் மாநில அமைச்சரவை கரோனா தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களைத் தொழில்முனைவோராக மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தையும் அம்மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, 50 விழுக்காடு வரை வட்டி இல்லா கடனையோ அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு கூடுதலாக 50 விழுக்காடு மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், திருமணமாகாத பெண்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பிறகு ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பிகாரில் உயர் கல்விக்கான மாணவர் கடன் அட்டை திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றைக் கண்டறிய சுய உதவி திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
மாநிலத்தின் அனைத்து ஐடிஐ, பாலிடெக்னிக் நிறுவனங்களிலும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சோலார், ட்ரோன் தொழில்நுட்பம், ஆப்டிகல் ஃபைபர், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வி கற்காத, புதிய திறன் பயிற்சிபெற விரும்பும் இளைஞர்களுக்கு, பிகார் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மெகா திறன் மையத்தை திறக்கும், அங்கு மாணவர்களுக்கு அழகுக்கலை, ஆரோக்கியம் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ”15 ஆண்டுகள் ஆட்சி செய்தும் வரவு-செலவு தெரியவில்லை” - நிதீஷ் குமாரைத் தாக்கும் தேஜஸ்வி யாதவ்!