கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அதிகிரித்துவருகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் ஒப்பீட்டளவில் பீகார் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது. இதனிடையே, புதிதாக 12 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு கரோனா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், "முதலில் நான்கு பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் வயது 12 முதல் 29 வயதாக உள்ளது.
பிறகு, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரின் ரத்த மாதிரிகள் நோய் கண்டறியும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களுக்கும் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமன் நாட்டிற்குச் சென்று வந்தவருடன் இவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. துபாயிலிருந்து திரும்பிய 36 வயது நபருக்கு நோய் பாதிப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறிய இந்தியாவின் தூய்மையான நகரம்!