ராஜஸ்தானில் புதிய கரோனா (கோவிட்-19) வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை பெரும்பாலானவர்கள் மாநிலத்தின் தலைநகரில் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பில்வாரா மாவட்டம் திகழ்ந்தது. அங்கு பலர் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகள் மோசமான விளைவை சந்தித்துள்ளன.
ஆகவே அங்கு இரண்டு விதமான சவால்கள் நிலவுகிறது. ஒன்று மாவட்டத்தில் உள்ள கரோனா நோயாளிகளை கட்டப்படுத்த வேண்டும். மற்றொன்று கரோனா பரவலை தடுக்க வேண்டும். இதற்கிடையே கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியும் வருகின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது பில்வாரா இந்தியாவின் இத்தாலி போன்றே தோற்றமளித்தது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர முயற்சியால், தற்போது இந்த மாவட்டம் நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. பில்வாரா மாவட்டத்தில் வைரஸைக் கட்டுப்படுத்த பல கடுமையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.
கடுமையான ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து மாவட்டத்தில் பூட்டுதல் விதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக நிர்வாகம் அதன் குடிமக்களுக்கு உதவக்கூடிய அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்தது. மாவட்டத்தின் எல்லைகள் முற்றிலுமாக மூடி சீல் வைக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தை விட்டு ஒருவர் கூட வெளியேறவோ அல்லது நுழையவோ முடியவில்லை.
கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட சுகாதாரத் துறை முழுமையான பங்களிப்பை அளித்தது. கோவிட்-19 பாதிப்பாளர்கள், அவர்களின் குடும்பங்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் மக்கள் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று பரிசோதனைக்கு ஆளானார்கள். கோவிட்-19 பாதிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அவர்களின் அன்றாட வழக்கத்திலிருந்து உணவு வரை ஒவ்வொரு விவரமும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. அவர்களுக்கு சோதனை தவறாமல் நடத்தப்பட்டது.
அதன் விளைவாக, பில்வாராவில் கடந்த மாதம் (மார்ச்) 30ஆம் தேதிக்கு பிறகு ஒருவருக்கு கூட கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இது கடிகாரமாய் சுழன்று சுழன்று உழைத்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அயராத முயற்சியால் சாத்தியமானது.
எனினும் நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. மக்கள் முகக்கவசம் அணியவும், சோப்புகளால் கைகளை கழுவவும், சுத்தமான ஆடைகளை அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றனர்.
காவல்துறையினரின் அயராத முயற்சியையும் மறுக்க முடியாது. ஊரடங்கு உத்தரவின் போதுகாவல்துறையினர் விழிப்புடன் இருந்தனர். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சோதனைகள் நடத்தியதுடன் பாதுகாப்பும் அளித்தனர். இது வெற்றிகரமாக நிறைவடைய இந்த கண்டிப்பும் ஒரு காரணம்.