வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் தங்கம், போதைப்பொருள், விலை உயர்ந்த மின்னணு பொருட்கள் ஆகியவற்றை கடத்தி வருவது சாதாரணம் ஆகிவருகிறது. ஒரு சில நேரங்களில் கற்பனைக்கும் எட்டாத வகையிலும் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் கொக்கைன் போதைப் பொருளை பெண் ஒருவர் கடத்தி வந்த சம்பவம் சுங்கத்துறை அலுவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், மார்ச் 2 ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணி சந்தேகத்துக்கிடமான முறையில் உலாவந்ததை சுங்கத்துறை அலுவலர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து, அப்பெண்னை பிடித்து விமான நிலைய சரக்குப்பிரிவு, சுங்கத்துறை அலுவலர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் 150 கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியுள்ளேன் என்றும் அவற்றை வெளியே எடுக்கும் வகையில் பிறப்புறுப்புக்குள் ஒரு சிறிய டியூப் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளதாகவும் அலுவலர்களிடம் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அப்பெண்ணை இரண்டு நாள்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து பெண்ணின் பிறப்புறுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கொக்கைன் மாத்திரைகளையும் வெளியே எடுத்தனர். இந்தப் போதை பொருள்களின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 8 கோடி 31 லட்சம் இருக்கும் என, சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தீவிர விசாரணைக்கு பின் வெளிநாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொக்கைன் போதைப்பொருளை கொடுத்து அனுப்பிய நபர்கள் யார், இந்தியாவில் அவற்றை யாரிடம் கொடுக்க வந்துள்ளார் என்பது குறித்து விரிவாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனி, வழக்குரைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை