கர்நாடக மாநிலம் பெங்களூரில் போதை பொருள் விநியோகம் சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக பல கன்னட பிரபலங்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிபி போலீஸால் பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு கஞ்சா சாக்லேடா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி,சஞ்சனா கல்ராணி ஆகியோரின் பிணை மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வழக்கின் பிணை மனுக்களை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீனப்பா விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென நீதிமன்ற வளாகத்தில் பார்சல் ஒன்று நீதிபதிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்த போது, கடிதம் மற்றும் வெடிகுண்டு பொருள்களும் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில், "போதைப்பொருள் வழக்கில் நடிகைகளுக்கும் பிணை வழங்கும்படியும், பெங்களூரு டிஜே ஹல்லி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் குண்டு வெடிக்கும்" என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி சீனப்பா உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு வந்த காவல் துறையினர் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதை மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.