ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெடிகுடெம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித். இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர் ராம்பாபுவை ரோஹித் அடித்ததால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரோஹித் திடீரென அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் பொதுமக்களும், காவல் துறையினரும் குவியத் தொடங்கினர். அப்போது பேசிய ரோஹித், தான் குற்றமற்றவர் என்றும், நான் நேசித்த பெண்ணையும், குடும்பத்தினரையும் அப்பகுதி அரசியல்வாதிதான் துன்புறுத்திவந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
"உடனடியாக அப்பெண்ணும் அரசியல்வாதியும் இங்கு வர வேண்டும் இல்லையென்றால் கீழே குதித்துவிடுவேன்" என மிரட்டியபடியே மீண்டும் டவரில் ஏறியுள்ளார்.
அப்போது, அங்கிருந்த தேனீ கூட்டை தவறுதலாக ரோஹித் கலைத்ததால், ஆத்திரமடைந்த தேனீக்கள் கொட்டியதில் ரோஹித் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதுமட்டுமின்றி தேனீக்கள் கூட்டம் கீழே இருந்த காவல் துறையினர், பொதுமக்களையும் கொட்ட முயற்சித்ததால் அனைவரும் சிதறி ஓடத் தொடங்கினர்.
பலத்த காயமடைந்த ரோஹித் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.