கடந்த 19 ஆம் தேதி நடிகை பானுப்பிரியா, அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் ஆகியோர், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், தங்கள் வீட்டில் இருந்த நகை, பணம், ஐபேட் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில், தங்கள் வீட்டில் பணிபுரியும் சிறுமியையும், அவரது தாய் பார்வதியையும் சந்தேகித்து விசாரணை செய்தோம்.
இதில், தனது மகள்தான் நகைகளையும் பணத்தையும் எடுத்து தன்னிடம் கொடுத்ததாக பார்வதி ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் பார்வதி, நகைகளையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டு தனது மகளை அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்றவர் திரும்பி வரவில்லை என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பானுப்பிரியா தனது மகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாகவும், பானுப்பிரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணன் தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும், பார்வதி ஆந்திர போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்படி ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை வந்து சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து திநகர் இணை ஆணையர் அசோக் குமார் தலைமையிலான போலீசார் அச்சிறுமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் சிறுமியும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை போலீசார் ஆந்திரா விரைந்து அச்சிறுமியின் வீட்டிற்கு சோதனைக்காக சென்றுள்ளனர்.