ஜூலை மாதம் 31ஆம் தேதி அடையாளம் தெரியாத நிலையில், உடலில் பல காயங்களுடன் ஒரு பெண் சடலம் பெங்களூரு கே.ஐ.ஏ வளாகத்தின் அருகில் கிடப்பதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சடலத்துடன் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சடலத்துடன் பெண்ணின் கைப்பை, கைபேசி போன்ற எந்த பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் இறந்த பெண்ணின் உடலில் பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக காவல் துறையினர் தகவல் அளிக்கின்றனர்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்ட பெங்களூரு காவல்துறையினர், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் எண்ணைக்கொண்டு இறந்த நபர் கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் பூஜா சிங் என்பதை கண்டறிந்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்காக இவர் ஜூலை 30ஆம் தேதி பெங்களூரு வந்துள்ளார் எனவும், அதன்பின் மீண்டும் கொல்கத்தா செல்வதற்காக அவர் ஓலா நிறுவனத்தில் தனது இமெயில் மூலம் காரினை பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் ஹெங்கனஹள்ளியைச் சேர்ந்த ஓலா கார் ஓட்டுநரான நாகேஷ் என்பவரிடம்(22) விசாரணை மேற்கொண்டபோது, பூஜாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் பணம்தர மறுத்ததால் காரில் இருந்த இரும்புக் கம்பியைக் கொன்டு தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறினார். மேலும், தன்னை யாரும் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக பூஜாவின் உடலை கடையரப்ப ஹண்ணாகி கிராமத்திற்கு அருகே உள்ள கே.ஐ.ஏ வளாகத்திற்கு அருகே வீசிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.