கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை சேர்ந்து சந்தித்தன. ஆனால் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களை பாஜக பிடித்து இருக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ்குண்டுராவ், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் குமாரசாமி, மக்களவைத் தேர்தலில் அடைந்துள்ள தோல்வி குறித்து விவாதித்தாக கூறினார். ஆனால் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவவுள்ளதாக கிடைத்த தகவலால், தனது பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில்தான் முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கூட்டணி ஆட்சிக்கு எழுந்துள்ள சிக்கலை தீர்க்க காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத், மேலிட பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர்.