மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பான்சா கிராமத்தில் சூரிய ஒளி மின்சக்தி அடுப்பு மூலம் 74 வீடுகளில் தினமும் உணவு சமைத்து வருகின்றனர். இந்த யோசனையை முதலில் ஐஐடி மும்பை தெரிவித்திருந்தது. இதனை அறிந்த சமூக செயற்பாட்டாளர் மோகன் நாகர் மத்திய அரசிடம் இந்தத் திட்டத்தை தங்கள் கிராமத்திற்கு வழங்குமாறு கேட்டிருந்தார். மத்திய அரசு இதனை ஏற்றுக்கொண்டு அவருடைய கிராமத்தில் இந்த சூரிய மின்சக்தியை செயல்படுத்த அனுமதி வழங்கி, அதற்காக கிராமத்தில் வசிப்பவர்களுக்குத் தேவையான அடுப்பினையும் வழங்கியது.
இந்தத் திட்டமானது மத்திய அரசால் பான்சா கிராமத்தில் 2018ஆம் ஆண்டு முன்னோட்ட மாதிரியாக தூய்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு, அதற்காக இரண்டு விருதுகளையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் டிசம்பர் 2018ஆம் ஆண்டு நிறைவுற்றது.
தொடர்ந்து பன்சா கிராமத்தில் குடியிருப்பவர்களில் இந்தத் திட்டம் பலவழிகளில் பயன் அடைகிறது. இது குறித்து அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், தற்போது நாங்கள் காட்டிற்குச் சென்று பல மணிநேரம் செலவிட்டு அடுப்பு எரிப்பதற்காக விறகுகளைக் கொண்டுவரத் தேவையில்லை. மேலும், எங்கள் வீட்டு பாத்திரமும், சுவரும் கறுப்பு ஆவதில்லை. சமையலை குறித்த நேரத்தில் செய்ய முடிகிறது எனவும் தெரிவித்தார்.
இந்தியா 2022ஆம் ஆண்டிற்குள் 100 ஜி.வாட் சூரிய மின்சத்தி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அண்மையில் வந்த சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தற்போது குறைந்த அளவிலேயே சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வருடங்களாக சூரிய மின்சக்தி உற்பத்தியானது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இந்தியாவில் புதுப்பித்தக்க ஆற்றல் உற்பத்தி மூலம் பல சவால்களை எதிர்க்க வேண்டியுள்ளது.
2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க சான்றுகளின் மூலமாக 40 விழுக்காடு ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளது. இதற்கு முதற்படியாக பன்சா கிராமத்தில் தொடங்கிய இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரைவாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.