இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் ஈகை திருவிழாவான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இஸ்லாமியர்கள் புது உடை அணிந்து மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டும், மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படுவதற்காக மசோதா கடந்தவாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு பல்வேறு பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து யூனியம் பிரதேசங்காளாக பிரிப்பதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டபின் அந்த தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது. நேற்று மாலை மீண்டும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப்டடது. மேலும், பக்ரீத் பண்டிகைக்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருகில் உள்ள மசூதிகளுக்கு செல்ல மட்டுமே மக்களுக்கு அனுமதி என்றும், யாரும் தெருக்களில் கூட்டமாக நிற்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி காலை முதலே பொதுமக்கள் மசூதிகளில் வழிபாடு செய்யத் தொடங்கினர். அம்மாநிலத்தின் பாரமுல்லா, ராம்பன், அனந்தனாக், சோபியன், ஸ்ரீநகர் ஆகிய பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் அமைதியான முறையில் தொழுகையில் ஈடுபட்டதாக அங்கிருந்த பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் தொழுகையில் ஈடுபட்டு மசூதியில் இருந்து வெளியே வந்த மக்களுக்கு காவல் துறை அலுவலர்கள் இனிப்புகள் வழங்கி தங்களின் வாழ்த்தை பரிமாறினர். மேலும் தற்போது வரை மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.