நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்தியாவில் அரசியல் கட்சித்தலைவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கத்தில் பாஜக கட்சியினரும், ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியினரும் வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "எதிர்க்கட்சித் தலைவர்களை காட்டிலும் பிரதமர் மோடியின் தலைமைத் திறன் சிறந்து காணப்படுகிறது. இதனால் மோடி இரண்டாவது முறையாக பிரதமாக பதவியேற்க மக்கள் எண்ணுகின்றனர்.
இந்த முறையும் நம்மால் பிரதமர் மோடிக்கு பதிலாக இன்னொருவரை பார்க்க முடியாது. சவுகிதார் என்பவர் திருடர் அல்ல. அவர் தூய்மையானவர். இதைத்தான் நாட்டு மக்களும் கூறுகின்றனர்.
சிலர் மோடி குறித்து தவறான கருத்துகளை கூறுகின்றனர். ஒருவேளை அவர்களுக்கு மோடி மீது நல்லெண்ணம்இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாட்டுக்காக மோடி செய்யும் செயல்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஏர் ஸ்டிரைக் (விமான தாக்குதல்), சேட்டிலைட் ஸ்டிரைக் (செயற்கைக்கோள் தாக்குதல்) இவை அனைத்தும் நாட்டு மக்களுக்கு மோடி மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.