டெல்லி தெற்கு டெல்லியிலுள்ள மாளவியா நகரைச் சேர்ந்தவர் கன்டா பிரசாத்(80). இவர், பாபா கா தாபா என்ற சிற்றுண்டி உணவகத்தை நடத்திவருகிறார். கரோனா ஊரடங்கு காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த பாதிப்பிற்குள்ளான இவர், சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் பிரபலமான கௌரவ் வாசனிடம் தான் இந்த கரோனா ஊரடங்கினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் உணவகத்தை நடத்த மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் தெரிவித்தார்.
இதனை காணொலியாக பதிவு செய்த வாசன், முதியவருக்கு உதவி செய்ய விரும்புவோர் இந்த வங்கிக் கணக்கிற்கு தங்களால் முடிந்த தொகையை அனுப்புங்கள் எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து பலரும் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்திவந்தனர்.
இதையறிந்த கன்டா பிரசாத், தனக்கு அதுபோன்று இதுவரை யாரும் உதவி செய்யவில்லை என்றும், தன்பெயரை பயன்படுத்தி வாசன் பணமோசடி செய்துவருவதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.