பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காணொலி காட்சி மூலம் ஆன்மிகத் தலைவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவமான கபசுரக் குடிநீர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ் மருத்துவத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொற்றிலிருந்து மீள அதிகளவு உதவி புரிந்தது.
ஆனால், அவற்றை மேலும் விரிவுபடுத்த வேண்டும். கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஆயுஷ் அமைச்சகம் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சாத்தியக்கூறு உள்ளவரை மேலும் ஆராய்ச்சிக்குள்படுத்த வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் நோயெதிர்ப்புச் சக்திகளை அதிகரிப்பது குறித்து இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் தற்போது தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
தன்னுடைய ஆராய்ச்சி நிறுவனமும் ஆயுர்ஜெனோமிக்ஸ் எனப்படும் ஆராய்ச்சி திட்டத்தை இந்த ஆண்டின் மத்தியில் தொடங்கியது. இது கரோனா வைரசிற்கு எதிராகச் செயல்படும் ஆயுர்வேத பொருள்களைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி. இது தற்போதுவரை ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. இவை நல்ல முடிவுகளை அளித்தால் 10 ஆயிரம் பேருக்கு இதனை வழங்குவதில் மகிழ்ச்சியடைவேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆயுஷ் தரநிலை சிகிச்சைக்கான நெறிமுறையை வெளியிட்ட மத்திய அமைச்சர்