அயோத்தி வழக்கில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாக வாதாடி வந்தவர் வழக்கறிஞர் ராஜிவ் தவான். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து 40 நாட்கள் நடத்தியது. இவர் இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து இரு வாரங்கள் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராமர் கோயில் கட்டலாம், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு, தற்போது மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், வழக்கிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ராஜிவ் தவான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " என்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, என்னை நீக்கியுள்ளதாக ஜாமியத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜாமியத் அமைப்பு என்னை வழக்கிலிருந்து நீக்குவதற்கு உரிமை உண்டு. ஆனால், அவர்கள் சொன்னக் காரணம் தவறானது" என தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு, ஜாமியத் அமைப்பின் வழக்கறிஞர் இஜாஸ் மக்புல், "ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய விரும்பியது. ஆனால், ராஜிவ் தவான் இல்லாத காரணத்தால் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார். இது, பெரிய பிரச்னை இல்லை" எனப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், "நீதியின் சின்னமாக ராஜிவ் தவான் விளங்குகிறார். அவரின் தலைமையிலேயே உச்ச நீதிமன்றத்தில் போராடுவோம்" என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அயோத்தி வழக்கு: மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யும் ஜாமியத் உலமா ஹிந்த்?