இந்திய பொருளாதர வளர்ச்சி, முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது மந்தநிலையை சந்தித்துவருகிறது என்று பொருளாதர வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் 38 ஆண்டுகளாக இயங்கியவரும் ஐப்பான் நாட்டின் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா இது குறித்து தெரிவித்ததாவது, ஐரோப்பிய மக்கள் பயன்படுத்தும் கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்று தரத்தில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தெரிவித்தது வரவேற்கத்தக்கது.
ஆனால் அப்படி தயாரிக்கப்படும் வாகனங்களை எப்படி இந்திய மக்கள் வாங்கும் விலையில் விற்பனை செய்யமுடியும்? என்று கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதை குறைத்துள்ளது, தற்போது மாருதி சுசுகி, டாடா, ஃபோர்டு உள்ளிட்ட ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் உட்பட பல பெரும் நிறுவனங்களை விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது எனத் தெரிவித்தார். இதனால் நிறுவனங்களில் வேலை பார்க்கும் உயர்மட்ட ஊழியர்களுக்கும் குறைந்த சம்பளத்தை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், இந்தியாவில் இயங்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அரசை குற்றம் சாட்டுவதை நிறுத்தவேண்டும்! அவர்கள் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களை, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தால் அவர்கள் சந்திக்கும் நஷ்டத்தை ஈடுகட்டலாம் என்று அறிவுரை வழங்கினார்.
இதற்கு, பார்கவா அளித்த விளக்கத்தில், மாருதி சுசுகி ஆண்டிற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்களை குறிப்பாக ஐப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது, ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை, நம்நாட்டு மக்கள் பெருமளவில் வாங்கவில்லை என்றால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் உற்பத்தி வருமானத்தை விற்பனையில் ஈட்டுவது என்பது கடினம் என கூறினார்.