புதுச்சேரி லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் எடுக்க முயற்சிப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் வந்தது. இதையடுத்து டாட்டா கம்யூனிகேஷன் ஏடிஎம் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் சிறிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததும், அதன் மூலம் வாடிக்கையாளர்களின் ரகசியங்கள் திருடப்பட இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை ஏடிஎம் இயந்திரம் அறையில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆராய்ந்ததில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜாசரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த அவர் தனது கல்லூரியில் படிப்பில் விடுபட்ட பாடத்தின் தேர்வு எழுதுவதற்காக புதுச்சேரிக்கு வந்தபோது ஏடிஎம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் அவருடைய நண்பர்கள் பல்கேரியா நாட்டை சேர்ந்த மிலன் மற்றும் வால்டிமிர் ஆகிய இருவரையும் ஏடிஎம் திருட்டு வழக்கு சம்பந்தமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த ஏடிஎம் திருட்டு வழக்கில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்காக பயன்படுத்திய இரண்டு லேப்டாப், செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளனர் என்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அலுவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.