புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப்பின் கொறடா அனந்தராமன், ஈடிவி பாரத்திற்காக பிரேத்யக பேட்டி அளித்தார்.
அப்போது, புதுச்சேரியில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும். இத்திட்டம் மூலம் ஏழை நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தும் போது மக்களுக்கு அத்திட்டம் பெரிய உதவியாகவும் அரணாகவும் இருக்கும். எனவே அரசு இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், புதுச்சேரியில் எதிர்கொண்டுள்ள போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை செம்மைப்படுத்த நகரப் பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியில் சாலைகள் அமைப்பதற்கு வரைவு திட்டத்தை அரசு தயாரித்து, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுபோல் எதிர்காலத்தில் புதுச்சேரியிலும் இந்த நிலை ஏற்படக் கூடாது. எனவே நீர் மேலாண்மை அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் மழைநீர் சேமிக்க அவற்றைத் தூர் வாரி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். முதற்கட்டமாக அனைத்து அரசு கட்டடங்கள் மற்றும் அலுவலகங்களில் கட்டாய மழைநீர் சேமிப்புத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தான் சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்தார்.