அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை இந்த வெள்ளத்தால் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள காசிரங்கா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த 223 முகாம்களில் 173 முகாம்கள் நீரில் மூழ்கின. 430 சதுர கி.மீ பரப்பளவுக் கொண்ட இந்தப் பூங்காவின் 95 விழுக்காடு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதில் சிக்கி 51 வனவிலங்குகள் உயிரிழந்துள்ள நிலையில், 102 வன விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 51 வனவிலங்குகளிள், 45 மான்கள், மூன்று காட்டு பன்றிகள், ஒரு காண்டா மிருகம், ஒரு காட்டெருமை அடங்கும். மேலும் ஏராளமான புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் தங்களின் வாழ்விடங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1985இல் யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக காசிரங்கா தேசியப் பூங்கா அறிவிக்கப்பட்டது. நாட்டில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் மிகப்பெரிய புகலிடமாக இந்தப் பூங்கா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.