அஸ்ஸாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்க தேசத்திலிருந்து ஏராளமானோர் குடியேறியுள்ளனர். இதற்குப் பல ஆண்டுகளாக எதிர்ப்பு எழுந்துவந்த நிலையில், இந்தியர்களைக் கண்டறிய மத்திய அரசு கடந்த ஆண்டு கணக்கெடுப்பை நடத்தியது. அதன் அடிப்படையில், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான வரைவுப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
இதில், சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால், சர்ச்சை எழுந்ததையடுத்து விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பது குறித்து மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, மறு ஆய்வு நடத்தப்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டது. இதில், மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர், 19 லட்சத்து ஆறாயிரத்து 657 பேர் விடுபட்டுள்ளனர்.
இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான தருண் கோகாய் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ஒறு வெற்றுப் பத்திரம் என நான் நீண்டகாலமாக பேசிவருகிறேன். சிவப்பு கம்பளம் விரித்து வெளிநாட்டவர்களை நான் வரவேற்றேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்குப் பதிலாக என்.ஆர்.சி.ஐ அவர் சரியாக்கவில்லை.
என்.ஆர்.சி.இல் இடம்பெறாத இந்தியர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.