பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-கம்யூனிச கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், நேற்று பிகாரின் பெகுசராய் என்ற இடத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், "மக்கள் வாய்ப்பளித்தபோது, மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் எதையாவது கட்டியுள்ளனரா என்று உங்கள் பெற்றோரிடம் கேள்" என்று தேஜஸ்வி யாதவை விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்போதெல்லாம் அவர்கள் மாநிலத்திற்கு எதையும் செய்யவில்லை. ஒருவர் (லாலு) ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்றார், அப்போது அவரது மனைவியை முதலமைச்சராக்கினார்.
இதெல்லாம் பிகாரில் தான் நடைபெற்றது. ஆனால், இப்போது எனது அரசில், யார் தவறு செய்தாலும் அவர் சிறைக்குச் செல்வது நிச்சயம்" என்றார்.
மற்றொரு பரப்புரை கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், "அனுபவமே இல்லாத நபர்கள் எல்லாம் தாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறுகிறார்கள்" என்று தேஜஸ்வி யாதவை மறைமுகமாக விமர்சித்தார்.
முன்னதாக, பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நிதிஷ்குமார் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி சோர்வடைந்து விட்டார். நவம்பர் 9ஆம் தேதி லாலு பிரசாத் யாதவ் சிறையிலிருந்து வெளிவருவார், அதற்கு மறுநாள் நிதிஷுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பரப்புரைக் கூட்டத்தில் "லாலு வாழ்க!" முழக்கத்தால் காண்டான பிகார் முதலமைச்சர் நிதிஷ்!