ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி, பிரிவினைவாதி ஆகியோரை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. ஆனால், சமீபத்தில் பிரிவினைவாத இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சமாதானப்படுத்தி சரணடையவைத்த சம்பவம் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஜஹாங்கீர் அகமது பட் என்ற இளைஞர் சமீபத்தில் மாயமானார்.
அந்த இளைஞரை கண்டுபிடிக்க குடும்பத்தார் முயற்சி செய்தனர். இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அந்த இளைஞர் சிக்கினார். அவரை சரணடையவைக்க ராணுவத்தினர் முயற்சி செய்தனர். உங்களுக்கு ஒன்னும் ஆகாது என ராணுவ வீரர் ஒருவர் உறுதி அளிக்க, அந்த இளைஞர் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் உறவினர், பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மீண்டும், பிரிவினைவாத இயக்கத்தில் சேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என உறவினரிடம் ராணுவத்தினர் கூறினர்.
இதுகுறித்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா கூறுகையில், "இதுவரை நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இதுபோல் நடந்ததில்லை. அந்த இளைஞர் இறுதியில் சரணடைந்தார். அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய ராணுவத்தினர் சிறப்பாகவே செயல்படுவர். இது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு" என்றார்.
இதையும் படிங்க: 'பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் பாகிஸ்தான்'