ஜெகன் அண்ணா திட்டம்
ஆந்திராவின் வட கடலோர மாவட்டமான விஜயநகரத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, 'ஜெகன் அண்ணா வசதி தீவேனா' திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக பல்வேறு இடைநிலை படிப்புகளைத் தொடர்வோர் பயனடைவார்கள்.
இத்திட்டத்துக்கு இரண்டாயிரத்து 300 கோடி நிதி உதவி வழங்கப்பட உள்ளது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை கல்வியைத் தொடரும் 11 லட்சத்து 87 ஆயிரத்து 904 மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் வரவு
இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொத்தம் இரண்டாயிரத்து 300 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் இரண்டு தவணைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தப் பணம் மாணவர்களின் தாய்மார்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தின்படி ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தலா பத்தாயிரம், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு தலா இருபதாயிரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வண்ணம் மாணவ-மாணவியருக்கு தனித்தனியே பார்கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
திக்ஷா காவல் நிலையம்
இந்த அட்டையில் பயன்பெறும் மாணவ-மாணவியரின் முழுமையான விவரங்கள் இருக்கும். ஜெகன் அண்ணா கல்வித் தொகை திட்டத்தின் நோக்கம், உயர் கல்வியில் மாணவ-மாணவியரின் சேர்க்கையை மேம்படுத்துவதே.
தற்போது மாநிலத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உள்ளது. இத்திட்டத்தையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி, விஜயநகரத்தில், 'திக்ஷா' காவல்நிலையம் ஒன்றையும் திறந்துவைத்தார். இந்தக் காவல் நிலையத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் உள்ளிட்ட வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்.
துணை முதலமைச்சர் பங்கேற்பு
இந்நிகழ்வில், மாநில துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவானி, நகராட்சி நிர்வாக அமைச்சர் போட்சா சத்தியநாராயணா, உள் துறை அமைச்சர் எம். சுச்சரிதா, விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் ஹரி ஜவஹர்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: டிரம்பை வைத்து மோடியை வம்பிழுத்த சிவசேனா!