காணொலிக் காட்சி மூலம் நவா ராய்ப்பூரில் கட்டப்படவுள்ள புதிய சத்தீஸ்கர் சட்டப்பேரவை கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பதிவு செய்யப்பட்ட காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “கடந்த சில காலமாக, நம் நாட்டைத் தடம் புரட்ட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது ஜனநாயகத்தின் முன் புதிய சவால்கள் தோன்றியுள்ளன. இன்று நாடு குறுக்கு வழியில் செல்கிறது.
ஆட்சி செய்பவர்கள், நாட்டில் வெறுப்பையும், வன்முறையின் விஷத்தையும் பரப்புகிறார்கள். ஜனநாயகத்தின் மீது 'சர்வாதிகாரத்தை செலுத்துவதன் மூலம் இந்த நாட்டு மக்களின் குரலை அடக்க விரும்புகிறார்கள். மோசமான சிந்தனை நல்ல சிந்தனையை ஆதிக்கம் செலுத்துகிறது.
கருத்து சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. நாட்டு மக்கள், இளைஞர்கள், பழங்குடியினர், பெண்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், ராணுவ வீரர்ரள் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்தியா சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், ”நமது அரசியலமைப்பும், ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நம் நாடு எதிர்கொள்ள நேரிடும்” என்று நம் முன்னோர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
நாங்கள் ஆட்சியில் இருக்கும் காலம் வரை, கடைக்கோடியில் உள்ள மக்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு ஒரு முடிவெடுப்போம் என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களால் அரசியலமைப்பைக் காப்பாற்ற முடியாது. ஆனால் உணர்ச்சிகளை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தான் வெளியிட்டுள்ள இந்தக் காணொலியில், யாரையும் குறிப்பிடாமல் மத்தியில் ஆளும் அரசை சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பிற அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.