குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் உயர்மன்ற குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீட்டில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, அகமது படேல், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் சர்மா, "இளைஞர்களின் குரலை நசுக்க முயற்சி செய்யும் அரசின் போக்குக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது தேசிய பிரச்னை, அரசியல் பிரச்னை அல்ல. பொருளாதாரத்தை சீரழித்த மோடி அரசு, தற்போது சமூகத்தின் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது" என்றார்.
பின்னர் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, "மத்திய அரசின் நடவடிக்கைகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. பி.ஆர். அம்பேத்கர், அண்ணல் காந்தியடிகளின் கொள்கைக்கு எதிராக இந்தச் சட்டம் உள்ளது. அமைதியான வழியில் போராடும் மக்களை தாக்குவது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
இதையும் படிங்க: CAAPROTEST மக்கள் அமைதிகாக்க வேண்டும் - கர்நாடக முதலமைச்சர் வேண்டுகோள்!